கீதை எட்டாவது அத்தியாயம் எட்டாவது ஸ்லோகம்.
அப்யாஸ யோக யுக்தேன சேதஸா நான்யகாமினா
ப்ரமம் புருஷம் திவ்யம் யாதி பார்தானுசிந்தயன்
அர்ஜுன !! பகவானை தியானிப்பது என்ற பயிற்சியான யோகத்தில் ஈடுபட்டு, வேறு விஷயங்கள் பால் செல்லாத மனதினால் பகவானையே சிந்தித்திருக்கும் மனிதன் மிக்க உயர்ந்த ஓளியுடன் கூடிய தெய்வ புருஷணையே ( பர ப்ரும்மத்தையே = பரமேச்வரனையே ) அடைகிறான். இது நியதி.
யோகங்களில் ' அப்யாஸ யோகம் ' என்று ஒன்று இருக்கிறதா என்ன? அதில் மனதை லயிக்கச்செய்வதெப்படி?
யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை, த்யானம், இவற்றைப் பயிற்சி செய்வதே அப்யாஸ யோகம் ஆகும். இந்த வகையான அப்யாஸத்தில் மனதை லயித்து ச்ரத்தையுடன் அதில் ஈடுபட்டு பயிற்சி செய்பவரை நாம் அப்யாஸ யோக யுக்த: எனச் சொல்கிறார் பகவான்.
ந அன்யகாமி என்றால் எப்படிப்பட்ட மனம் கொள்ளவேண்டும் ?
மனம் ஒரு பொருளைப் பற்றிக் குறிப்பாகச் சிந்திக்கையில் ஒரு கணம் கூட அதை விட்டு நீங்கி வேறு ஒரு பொருளை
நினைப்பதில்லையோ, தான் ஈடுபட்டு இருக்கும் பொருளிலேயே, சிந்தனையிலேயே தொடர்ந்து முனைப்புடன் செயல்படுகிறாதோ அந்த மனம் தான் ' நாந்யகாமி.' ( வேறு எங்கும் செல்லாதது ) எனச்சொல்கிறார்.
' அனுசிந்தனம் ' செய்வது என்றால் ?
பயிற்சியில் ஈடுபட்டு, வேறுபுறம் திரும்பாத மனதில் பரமேஸ்வரனுடைய உருவமற்ற ஸ்வரூபத்தை இடைவிடாது
த்யானம் செய்வதே ' அனுசிந்தனம் ' ஆகும்.
பரமம், திவயம், ஆகிய அடைமொழிகளுடன் கூடிய ' புருஷம்' என்று யாரைக் குறிப்பிடுகிறார் ?
எட்டாவது அத்தியாயம் 4வது ஸ்லோகத்தில், அதி யக்ஞன் என்றும் 8 /22 ல் பரம புருஷன் என்றும் சொல்லப்படும்
படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில் புரிபவரும், சகுணமாயும் நிர்குணமாயும், எங்கும் நிறைந்து அதே சமயம் அவ்யக்தாரானவரும், ஞானஸ்வருபியுமான பகவானே ' திவ்ய பரம புருஷன் '
அவரை இடையறாது சிந்தனை செய்து அவருடைய உண்மை ஸ்வரூபத்தை அறிந்து, அவருடன் ஒன்றி, அவராகவே
ஆகிவிடுவதுதான் " அவரை அடைவதாகும் "