Wednesday, August 4, 2010
உண்மையான பக்தி
நன்றி : கல்கி
8.8.2010
தேதியிட்ட கல்கியில் பிரசுரமானது.
நம் கஷ்டத்தை ஈஸ்வரனிடம் சொல்கிறபோதே அவனுக்கு அது தெரியாது என்று நாம் நினைப்பதாக ஆகிறது.
அதாவது ஈஸ்வரனுடைய எல்லாம் அறிந்த சர்வக்ஞத்வத்துக்குக் குறை உண்டாக்குகிறோம். இந்தக் கஷ்டத்தைப் பொக்கு அல்லது கஷ்டத்தைப் பொருட்படுத்துகிற மனப்பான்மையை மாற்று என்கிற போது நாம் கேட்டுத்தான் அவன் ஒன்றைச் செய்கிறான் என்றும் ஆகிறது. அதாவது தானாகப் பெருகும் அவனது காருண்யத்துக்குக் குறை உண்டாக்கிவிடுகிறோம். இப்படி ஞான சமுத்திரமாக, கிருபா சமுத்திரமாக இருக்கிற ஈஸ்வரனுடைய ஞானம், கிருபை இரண்டிற்கும் தோஷம் கற்பிக்கிற பிரார்த்தனை உண்மையான பக்தி இல்லை.
ஆனால், இப்படிப்பட்ட பிரார்த்தனையால், நம்முடைய மனச்சுமை தற்காலிகமாகவாவது இலேசாகி, கொஞ்சம் சாந்தி பிறக்கிறது.
நாமாகவே எல்லாம் சாதித்து விட முடியும் என்ற அகங்காரத்தை விட்டு ஈஸ்வரனிடம் யாசிக்கிற அளவுக்கு எளிமை பெறுகிறோமே, அதுவும் நல்லது தான்.
அவனும், நாம் அவனுடைய ஞானத்துக்கும் கருணைக்கும் குறை உண்டாக்கியதைக்கூட பொருட்படுத்தாமல் நம் கர்மாவையும் மீறி பிரார்த்தனையை நிறைவேற்றினாலும் நிறைவேற்றலாம்.
ஆனாலும், ஒரு கஷ்டம் போனாலும் இன்னொரு கஷ்டம் என்று இலேசாக வாழ்க்கையில் வந்து கொண்டேதான் இருக்கும். ஆகையால், லெளகீகமான கஷ்ட நிவிருத்திக்காகப் பிரார்த்தனை பண்ணுவதற்கு முடிவே கிடையாது.
" நீ எப்படி விட்டாயோ, அப்படி ஆகட்டும் " என்று சரணாகதி செய்வதுதான் பக்தி. தனக்கு என்று எதுவுமே இல்லாவிட்டால், மனசின் அழுக்குகள் நீங்கி , அது கண்ணாடி மாதிரி சுத்தமாக இருக்கும்,. அப்போது நிறைந்த ஆனந்தமாக இருக்கலாம்.
...ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள்.