Thursday, June 3, 2010
சங்கரன் தாள்தொழாய் நெஞ்சமே.
இந்தப் பாடலை இயற்றிய திருமதி தங்கமணி அவர்கள் வலைப்பதிவுக்குச் செல்ல
இப்பதிவின் தலைப்பை கிளிக்குங்கள்.
சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்"
சிவசிவாவிற்கு என் நன்றி!)
சூளையில் வெந்துழல் துன்பமே சூழினும்
தாளதில் சிந்தையாய்த் தானறும் தன்மையர்
கேளவர் நாவினுக் கின்புசெய் பேரினான்
காளகண் டன்கழல் கைதொழாய் நெஞ்சமே!
ஏற்றினில் வந்துமே இன்னருள் செய்பவன்
ஊற்றெழும் பக்தியால் உற்றிடும் சுத்தனாம்
பேற்றினும் பேறவன் பெற்றியைப் பேசுதல்
மாற்றிலாப் பொன்னவன் தாள்தொழாய் நெஞ்சமே.
வாய்சொலும் பேர்புகழ் மல்குநீர்ப் பொங்கிடத்
தூய்மலர் மாலையில் தோன்றிடும் சோதியர்
தாய்தரும் நேசமாய்த் தண்ணருள் செய்பவர்
போய்நிதம் பொற்கழல் போற்றுவாய் நெஞ்சமே
புன்புலால் யாக்கையைப் போற்றியேக் கொண்டதென்?
துன்பமே;நெஞ்சமே!"சோதியே!சங்கரா!
என்பதே மாலையாய் ஏற்றவா!நின்மலா!
என்பொனே!" என்றுநீ ஏத்தினால் இன்பமே.
தொல்லையைக் கூட்டிடும் சோதனை யாவுமே
இல்லையென் றோட்டுமே எம்பிரான் தண்ணருள்
தில்லையின் கூத்தனார் செம்மலர் தாள்தொழ
எல்லையில் வல்வினைக் கட்டொழிந் தின்பமே.
காண்டுடன் வீசிடும் காலனின் பாசமும்
மூண்டெழும் பக்தியின் முன்னரென் செய்திடும்?
தூண்டிலின் மீனெனத் துன்புறா தின்புறத்
தாண்டவன் சங்கரன் தாள்தொழாய் நெஞ்சமே.